மனிதன் உலகில் தோன்றியபோது மளிகைக் கடைகளும், மாமிசக் கடைகளும் கிடையாது உணவு வேட்டையாடினால்தான் கிடைக்கும். தினமும் 3 வேளை சாப்பாடு என்பது கிடையாது. சமயங்களில் உணவே இல்லாமல் பல நாட்கள் ஓட்டிவிடலாம். மனிதன் பிழைத்திருக்க வேண்டுமானால் ஏதாவது ஒரு விதத்தில் உணவை அவன் சேமித்து வைத்தாக வேண்டும். உணவை சேமிக்க அவனுக்கு ரெப்ரிஜிரேட்டர்கள் இல்லாததால் உடம்பே சேமிப்புக் கலமாகியது. அப்படி தோன்றியதுதான் ‘அடிப்போஸ் திசு’ (Adipose Tissue) என்ற உடல் கொழுப்பு சேமத்திசு. தொடை, இடுப்பு, வயிறு, பிட்டம் போன்ற இடங்களில் கொழுப்புத்திசுக்களில் தேவைக்கதிகமான உணவு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.
மாதக்கணக்கில் மனிதன் பட்டினி கிடந்தாலும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.அண்மைக் காலங்களில் உடலில் அளவுக்கதிகமாக உடல்கொழுப்பு அதிகமாகி ‘ஒபிசிட்டி’ எனப்படும் (Obesity) உடல் பருமன் பெருகிக் கொண்டு வருகிறது.தொழில் நுட்ப வளர்ச்சியால் பட்னியும் உழைப்பும் குறைந்ததே காரணம் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. எல்லோருமே இருந்தாலும் குண்டாகாமல் பகுதிப்பேர் மட்டுமே அளவுக்கதிகமாக குண்டாவதின் காரணம் என்ன? உடம்பின் வெப்பம், இரத்தஅழுத்தம், நீர் அளவு உடல் சக்கரை போன்றவை கனக்கச்சிதமாக சீராக வைப்பதற்கென்று தானியங்கி செயல்படுகிறது. அதுபோல உடலின் எடை இவ்வளவுதான் இருக்கவேண்டும்....அதற்குமேல் போனால் தடை அல்லது குறைக்கவேண்டும் என்று உடலிலேயே ஒரு தானியங்கி கருவி இருக்கிறதா? என்ற கேள்வி பல காலமாகவே உடலியங்கியல் வல்லுநர்களிடம் இருந்து வந்தது.
உண்மையில் அப்படி ஒரு கட்டுப்பாட்டுக் கேந்திரம் இருக்கிறதா? எனில் இருக்கிறது என்றுதான் இன்றைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதோ பாருங்கள் உடல் எப்படி அவ்வப்போது தேவைப்படும் ஆற்றலை பெறுகிறது என்பதை உடம்பின் வேலைகளுக்குத் தேவையான சக்தியை குளூக்கோஸிலிருந்து பெற்றுக்கொள்கிறது. குளூக்கோஸ், சாப்பிடும் சப்பாத்தி அல்லது இட்டிலியிலிருந்து ஜீரணத்தின் மூலம் பெறப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தம் எல்லாத்திசுக்களிலும் பாய்ந்து குளூக்கோஸை விநியோகம் செய்கிறது. இரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளூக்கோஸ் (சக்கரை) சேர்ந்துபோனால் உடனே இன்சுலின் சுரந்து குளூக்கோஸ் இரத்தத்திலிருந்து தசை, அடிப்போஸ்திசுக்களுக்கு அனுப்பப்படுகிறது. தசையில் அது பயன்படுத்தப்பட்டு நீக்கப்படுகிறது. அடிப்போஸ்திசுக்களில் அது கொழுப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது.
அதேசமயம் கல்லீரலில் குளூக்கோஸ் உற்பத்தி உடனே நிறுத்தப்படுகிறது.
இரதத்தில் குளூக்கோஸ் அளவு என்னவாகும்? குறைந்தால் அடிப்போஸ் திசுக்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பு (டிரைகிளிசரைடு Triglyceride) கொழுப்பமிலமாக மாற்றப்பட்டு அவை கல்லீரலில் செரிக்கப்பட்டு (Ketone)கீட்டோன் என்ற பொருளாக மாற்றப்பட்டு அவை எரி பொருளாக தசைகளில் பயன்படுத்தப்படும். இப்படியாக நம் உடலின் ஆற்றலின் தேவை சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் பாலூட்டிகளின் உடம்பில் (மனிதன் உட்பட) எவ்வளவு ஆற்றல் கொழுப்பாக சேமிக்கப்பட்டு இருக்கிறது என்பதை உடல் அறியும் சாதனம் இருக்கவேண்டும் என்பதுதெரிகிறது. உடலில் தேவைக்கு மேல் ஆற்றல் கொழுப்பாக சேமிக்கப்படும்போது அதற்கேற்ப விலங்குகளின் நடவடிக்கை களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
பசி அளவு குறைவதும், உடல் இயக்கம் அதிகமாகி ஆற்றல் செலவிடப்படுவதும் தெரிகிறது. இதன் மூலம் உடலின் எடை எப்போதும் சீராக காக்கப்படுவதும் தெரிகிறது. விலங்குகளுக்கு திடீரென்று உணவு குறைக்கப்படும்போது அவற்றின் நடமாட்டமும் குறைந்து அதன் மூலம் ஆற்றல் வீணாக்கப்பட்டு உடம்பு மெலிவதும் தடுக்கப்படுகிறது. இப்படி ஒரு மெக்கானிசம் மனித உடலிலும் இருக்கிறது..தேவைக்கு அதிகமாக ஆற்றல்வெறும் 1 சதவீதம் அதிகமானாலும் கூட 30 ஆண்டுகளில் மனித உடலின் எடையில் 28 கிலோ கூடிவிடும் என்பது தெரிகிறது.
எனவே ஏதோ ஒரு விதத்தில் இது தடுக்கப்படவேண்டும் என்பது கண்கூடு. ஏனோ தெரியவில்லை மனிதர்களில் சிலரிடம் கொழுப்பு சேமிப்பு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. மனிதனின் கடந்த 2 மில்லியன் ஆண்டு பரிணாமத்தில் குறிப்பாக கடந்த 15ஆயிரம் ஆண்டுகளில் நிறைய ஜெனடிக் வேறுபாடுகள் குவிந்துவிட்டன. அதில் ஒரு வேறுபாடு உடல் கொழுப்பு மூலம் சேமிக்கும் முறையிலும் ஏற்பட்டுவிட்டது என எண்ணத் தோன்றுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் 40 ஆயிரம் பேர்களிடம் ஜீனோமில் என்ன வித்தியாசம் காணப்படுகிறதா என்று ஆராயப்பட்டது. சொல்லி வைத்தாற்போல எல்லா குண்டு மனிதர்களிடமும் FTO என்ற ஜீனில் வேற்றுமை தெரிந்தது. அது ஒல்லியானவர்களிடம் காணப்படவில்லை. FTO ஜீனில் குண்டு ரகம், ஒல்லி ரகம் என்று இரண்டு ரகம் இருக்கும் போலிருக்கிறது. ஜீன்கள் வெற்றிடத்தில் வேலை செய்வதில்லை, அவை உயிரினத்தின் வாழும் நிலை, சுற்றுச்சுழல், நோய், கிருமிகளின் படை எடுப்பு,பட்டினி, பஞ்சம், என்ற பலவகை மாறறங்களுக்கிடையே உடலில் செயல்படுவதால் மனித இனத்தில் ஜீன்களின் சிறு சிறு மாற்றங்கள் விளைந்துவிடுகிறது.
அதில் ஒன்று மனிதனின் கொழுப்பு சேமிக்கும் அளவை நிர்ணயிக்கும் ஜீனிலும் ஏற்பட்டிருக்கலாம். அதனால் மூளையில் பசி, ஆகாரம், உடல், எடை கட்டுப்பாடு ஆகியவற்றை நிர்ணயிக்கும் நரம்பு மண்டலத்தை பாதித்திருக்கலாம். இதுதான் சில மனிதர்கள் எந்த பாவமும் செய்யாமலே குண்டாகி விடுகிறார்கள். உடலின் எந்த நிகழ்ச்சியும் மூளையின் அனுமதி இல்லாமல் நிகழ்வதில்லை. பசி, உற்சாகம், சோர்வு என்று ஒவ்வொரு அங்க இயக்கத்திற்கும் எவ்வெவ்வளவு ஆற்றல் தேவை என்பதை மூளைதான் நிர்ணயிக்கிறது.
விலங்குகளிடம் செய்யப்பட்ட பரிசோதனைகளில் ஹைப்போத்தலாமஸில் சிறு 'புண்' ஏற்படுத்தினால் செய்யப்பட்ட இடத்திற்கேற்ப மாறுதல் ஏற்பட்டது. ஹைப்போதலாமஸானது தன் வேலையை திறம்படச் செய்ய வேண்டுமெனில் அதற்கு நிமிடத்திற்கு நிமிடம் உடல் ஆற்றல் அளவு பற்றியதகவல் கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.வயிற்றுபசியின் அளவுக் கேற்ப இரத்தத்தில் சில மூலக்கூறுகள் மாறுபடுகிறது. குளூக்கோஸ்,குடலிலிருந்து வெளிப்படும் ஹார்மோன்கள், இன்சுலின் மற்றும் கோலிசிஸ்டோகைனின்(Cholecystokinin CCK) போன்ற
மூளையின் உள்ளே மையப் பகுதிக்குக் கீழே ‘ஹெப்பபோதாலமஸ்’ என்ற உறுப்பு இருக்கிறது . இதுதான் உடலின் ஆற்றல் நிலையை உற்று கவனித்து சிரமைக்கும் உறுப்பாக செயல்படுகிறது.
ஜீரணம் தொடர்பான பொருள்களின் அளவுக்கேற்ப பசியின் அளவு வேறுபடுகிறது. ஜெஃப்ரி ஃப்ரீட்மேன் (JeffreyFriedman) (Rockefeller University) என்பவர் 1994 இல் லெப்டின் (Leptin) என்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்தனர். இதைப்பற்றி இனி பார்ப்போம்.
ஜேக்ஸன் லெபாரட்டரி என்ற சோதனைக் கூடத்தில் எலிகளின் புதுரகம் ஒன்றைத் தோற்றுவித்தனர். இந்த எலிகளின் உடல் சொல்ல முடியாத அளவுக்கு எடை அதிகமாக இருந்தது. ஏகப்பட்ட பசி மிகக் குறைந்த நடமாட்டம். இரண்டும் சேர்ந்து உடலின் எடையைக் கூட்டிவிட்டன. இவற்றின் தாய் தகப்பானார் இருவரிடமிருந்தும் இதற்கான ஜீன் ஜோடிகளை (Ob/Ob) பெற்றிருந்தன. ஃப்ரீட்மேனின் குழுவினர் இந்த ஜீன்கள் குறிப்பாக கொழுப்புத் திசுக்களில் அதிகமாக வேலை செய்வதைக் கண்டு பிடித்தனர்.
இது ஜீனின் செயலால் உற்பத்தியாகும் புரதமானது ob ஜீன் மியுட்டேஷன் ஆன செல்களில் காணப்படவில்லை. இந்தப் புரதம் இல்லாததினால் தான் உடல் பருமன் அதிகரிக்கிறது என்பது தெளிவானது. கிரேக்க மொழியில் ஒல்லியாகஇருப்பதை லெப்டோஸ் என்பார்கள். அதையே அடிப் படையாக வைத்து அந்தப் புரதத்திற்கு ‘லெப்டின்’ என்று பெயரிட்டனர். ஏனெனில் இது உடலை ஒல்லியாக வைத்திருக்க உதவுகிறது. லெப்டின் புரதத்தை தினமும் இன்செக்ஷன் மூலம் கொடுத்து வந்ததும் குண்டு எலிகள் மெலிந்து சாதரண நிலையை அடைந்தன.
அவற்றின் பசி குறைந்தது, ஆற்றல் செலவும் அதிகரித்தது. மனிதர்களிலும் இந்த ஜீன் உள்ளது. இதில் சேதம் ஏற்பட்டால் பிழையான லெப்டின் உற்பத்தியாகி சிறு வயதிலேயே அசாத்திய குண்டாக வளரும் ஒபிசிட்டி ஏற்படுகிறது. உடலில் ஆற்றல் (கொழுப்பு) சேமிப்பு கிடங்குகளாகச் செயல்படும் அடிப்போஸ்திசுக்கிளலிருந்து தொடர்ந்து லெப்டின் மூலக்கூறு இரத்தத்தில் ஏறி மூளையை அடைகிறது. லெப்டினின் அளவைக் கொண்டு எவ்வளவு கொழுப்பு சேமகலத்திலிருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டு அதற்கேற்ப பசி, உடல் இயக்கம் ஆகியவற்றை நிறைவேற்றுகிறது.
லெப்டின் என்ற வேலைக்கார சுவிட்சை புரதம், ஒரு சுவிட்சை 'ஆன்' செய்கிறது. இன்னொரு சுவிட்சை 'ஆஃப்' செய்கிறது. ஹைப்போதலாமஸிஸ் ‘அர்க்குவேட் நியூக்ளியஸ்' என்ற பகுதி ஏற்கனவே வயிறு நிரம்பிய திருப்தி உணர்வினை வழங்கும் என்பது தெரிந்ததே. இங்குள்ள சில நரம்புசெல்மண்டலத்தில் லெப்டின் ஸ்விட்ச் ஆன் செய்து ஆல்ஃபா -MSH என்ற வயிறு நிரம்பிய உணர்வு தரும் பொருளை வெளிப்படுத்துகிறது.
வேறு ஒரு நரம்புத் தொகுப்புகள் இரண்டு நியூரோபெப்டைடுகளை உருவாக்குகிறது. இவை பசியை தூண்டி உடல் பருமனை உருவாக்குகின்றன. இந்த செயலை லெப்டின் Off செய்கிறது.
குடல் உணர்வுகள்
சாப்பிட்டு முடித்ததும் "ஆ...ஆனந்தமாக இருக்கிறது” என்று உப்பிய வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கும் போது இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளுங்களேன் என்று கேட்டுப்பாருங்கள் 'ஐயோ...முடியாது வயிறு வெடித்துவிடும்" என்பார்கள். எதில் திருப்தி இருக்கிறதோ இல்லையோ மனிதருக்கு சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் நிச்சயம் திருப்தி வந்துவிடும்.அடுத்த நாளுக்கும் சேர்த்து நம்மால் சாப்பிட முடியாது. இதற்குக் காரணம் என்ன? வயிறு புடைக்க சாப்பிட்டதும் வயிறு விரிவடைகின்றன. அந்த விரிவினை ‘வேகஸ்’ நரம்புகள் மூளையின் பசிஉணர்வு மண்டலத்திற்கு உணர்வாக எடுத்துச் செல்கின்றன. உடனே பசி மறைகிறது திருப்தி நிலவுகிறது.குடல் ஆகியவைஇன்சுலின் ஹார்மோன் கூட ஹைப்போதலாமஸிஸ் செயல்பட்டு உணர்வை நீங்குகின்றன. சிறுகுடலிலிருந்து சில ஹார்மோன்கள் புறப்பட்டு 'போதும்' என்ற உணர்வு ஏற்படச் செய்கின்றன. கோலிசிஸ்ட்டோகைனின் (Cholecystokinin CCK) என்ற ஹார்மோன் உடனடி திருப்தியை தரவல்லது. சிறுகுடலிலிருந்து வெளிப்படும் ஒரு பெப்டைடுகூட அதே திருப்தி உணர்வை தருவதாக கூறுகிறார்கள்.
பசியைத் தூண்டுவதற்கு ஏதேனும் ஹார்மோன் உள்ளதா என்று கேட்பீர்கள். உள்ளது, க்ரெலின்(Ghrelin) என்ற பொருள் வயிற்றிலிருந்து கிளம்பிச் சென்று மூளையில் பசி உணர்வை ஏற்படுத்துகிறது. தடிமனான மனிதர்களிடம் லெப்டின், CCK, PYY முதலானபசி அடக்கும் பொருளும், ‘க்ரெலின்’ என்ற பசி தூண்டும் பொருளும் எக்குத்தப் பாக சிக்னல் தருகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். குண்டு மனிதர்களில் உடல் எடையில் 5 கிலோ குறைந்ததும், அதை உடம்பு ஏதோ, ஆபத்து என்று ‘க்ரெலினை’ உற்பத்தி செய்து யானைப்பசியைத் தூண்டி விட்டு இழந்த எடையை விட மேலும் இரண்டுகிலோ அடையும் படி
செய்துவிடுகிறது.
இதுநாள்வரை நாம் கொழுப்புத் திசுக்களான அடிப்போஸ் திசுக்களை வெறும் சேமிப்பு கிடங்கு என்றே கருதி வந்திருக்கிறோம். பார்க்கப் போனால் அவை உடல் முழுவதும் பரவியிருக்கும் நாளமில்லா சுரப்பிகளோ என்று எண்ணும் படி, முக்கியமான ஹார்மோன் களை அவை சுரந்தபடி உள்ளன. அடிப்போகைன்ஸ்(Adipokines) பொதுப் பெயரிட்டு ஹார்மோன்களை குறி வைக்கிறார்கள். அடிப்போனெக்டின்(Adiponectin) எனும் ஒரு கொழுப்பு செல் உற்பத்தி செய்யும் ஹார்மோன் குண்டு மக்களிடம் மிகக்குறைவாகவும் ஒல்லி மக்களிடம் அதிகமாகவும் காணப்படுகிறது. எலிகளிடம் அடிப்போனெக்டின் அளவைக் குறைக்கும் போது அவை உடல் எடை போட்டுவிடுகின்றன. உடல் எடை குறைக்கும் மருந்து செய்பவர்களுக்கு இவை நல்ல. களமாக அமையும்.
மருந்துகள்
சைபூட்ரமைன் (Sibutramine)மற்றும் ஆர்லிஸ்டாட் (Orlistat) என்ற இரண்டு மருந்துகள் எடை குறைக்க மருத்துவர்களால் பரிந்துறைக்கப்படுகின்றன. ஆய்வாளர்கள் உடல் எடை குறைக்கபல அணுகுமுறைகளைக் கையாளுகிறார்கள்.எடை குறைப்பது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் உடல் எடையுடன் இதர உபாதை களாகிய இரத்த அழுத்தம், சக்கரைவியாதி, மூச்சிரைப்பு போன்றவற்றையும் குறைக்கவும் முயற்சிக்கிறார்கள்.
அணுகுமுறைகள்
வயிற்றின் அளவை சுறுக்கும் அறுவைச் சிகிச்சையாகிய பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை.இது இரைப்பையின் கொள்ளவை குறைக்கும் முயற்சி.
மூளையில் பசியுணர்வு, திருப்தி உணர்வு உடலின் எரிபொருள் அளவு, அடிப்போஸ் திசு அளவு, குடல்-வயிறு விரிதல் அறிவிக்கும் ஹார்மோன் அளவு போன்ற சகல வழிகளையும் தக்கபடி மாற்றி அடக்கி, தூண்டி எவ்வாறாயினும் எடை குறைக்கும் உத்தியை உருவாக்கி இருக்கிறார்கள்.
குடல் உயிரிகள்
ஒருவரின் குடலில் வாழும் நுண் உயிரிகளின் கூட்டத்திற்கும் உடல் எடைக்கும் தொடர்புருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. நமது குடலில் டிரில்லியன்கணக்கில் நுண்உயிரிகள் இருந்தபடி செரிமானம் செய்யஉதவுகின்றன. இவற்றிடையே நிலவும் எண்ணிக்கை சமநிலை மிகவும் முக்கியமானது. வாஷிங்டன் பல்கலையின் ஆய்வாளர்கள் குண்டு மனிதர்களின் குடலில் ஃபிர்மிகியூட்ஸ் (Firmicutes) வகை பேக்டிரியாக்கள் அதிகமாகவும் பேக்டிரியாய்டெட்ஸ்(Bacterioidates) வகை குறைவாகவும் உள்ளதைக் கண்டு பிடித்துள்ளனர். ஒல்லியானவர்களிடம் பேக்டீரியாய்டிடிஸ்கள் அதிகமாக இருப்பது உண்மை என்கிறார்கள். இதையும் ஒரு பக்கம் மனதில்வைத்துக் கொண்டு உடல் எடை குறைக்கும் மருந்துவம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
கொழுப்பு செல் தரும் சிக்னல்கள்
கொழுப்பு செல் தரும் சிக்னல்கள் உடலின் கொழுப்பாகவும் அடிப்போஸ்திசுக்களில் சேமிக்கப்படுகின்றன. அடிப்போஸ் செல்கள் கொழுப்பு நிரம்பியதும் லெப்டின் என்று ஒரு பொருள் மூலம் மூளைக்கு நிலவரத்தை தெரிவிக்கின்றன. உடனே மூளை சாப்பிடும் ஆர்வத்தை குறைக்கிறது.
மாறாக பட்டினியிருக்கும் போது அதே அடிப்போஸ் திசுக்கள் அடிப்போனெக்டின் என்று வேறு வகை ஹார்மோன்களை மூளைக்கு அனுப்பி பசி உணர்வை தூண்டச் செய்கின்றன இரண்டு வித சிக்னல்களையும் சமன் சிக்னல்களையும்செய்தால்தான் ஒருவர் சீரான உடல்எடையுடன் வாழமுடியும்.
சீர்கெடும்போது தசை மலையாகவோ அல்லது ஒல்லியாகவோ மாறிவிடுகிறார்கள்.
ஆப்பிளா பேரிக்காயா?
ஆப்பிளா பேரிக்காயா? ஆப்பிள் உடலுக்கு நல்லதுதான். ஆனால் அது உடலின் வடிவமாக இருக்கக் கூடாது. அடிவயிறு உடல் உறுப்புகளைச் சுற்றிலும் அடிப்போஸ் திசு சேர்ந்தால் உடம்பு ஆப்பிள் வடிவமாகிவிடும். இதுஆபத்து. இதயநோய்க்கு அழைத்துச்சென்றுவிடும்.தொடை, இடுப்பு, ஆகியஇடங்களில் சதைபோட்டால் பிரச்சனை இல்லை. இது பேரிக்காய் வடிவத்தை உடலுக்குத் தரும்.ஆப்பிளைவிட பேரிக்காய் நல்லது.
0 கருத்துகள்