சூறைக்காற்றில் ஒருவர் குடை பிடித்துக் கொண்டு போனால் குடைக்கும், அவருக்கும் என்ன நடக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை! ஆனால் ஆகாயத்திற்கே குடை பிடித்து நிற்கும் ஒரு மரம் அங்கே புயலடித்தாலும் அது பாதிக்கப்படுவதில்லை. அதைப்பற்றி பார்போம் வாருங்கள்.
டிராகன் மரம் அறிவியல் பெயர் : Dracaena draco
மரங்களுக்கு பெயர் வைப்பதை பெரும்பாலும் நிர்ணயம் செய்வது அம்மரத்தின் தோற்றமே. அந்த வகையில் இந்த மரத்திற்கு தலை கீழ் குடைமரம் என்ற பெயர் வழக்காகியுள்ளது. ஏனென்றால் அதன் கிளைகளும் இலைகளும் மேல் நோக்கி திரும்பி வளர்வதனால் அம்மரத்தின் பொதுத் தோற்றம் ஒரு குடை தலைகீழாகத் திரும்பியிருப்பது போல் உள்ளது. அதன் அடி மரம் ரத்தச் சிவப்பான ஒரு வகை பிசினை சுரந்து வெளிப்படுத்துகிறது. அந்த பிசின் டிராகன் என்ற விலங்கின் ரத்தம் போல் இருப்பதால் டிராகன் மரம் என்ற பெயர் வந்திருக்க வேண்டும்.
முதலில் இந்த டிராகன் என்பது என்ன மாதிரி விலங்கு என்று தெரிந்தால் அல்லவா இந்த ஒப்புவமையை நாம் புரிந்து கொள்ள முடியும். டிராகன் என்றால் என்ன? டிராகன் என்பது ஒரு கற்பனை விலங்கு. இந்திய, கிரேக்க மற்றும் நார்வே கலாச்சாரங்களில் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த விலங்கு உருவகமானது. மனித கலாச்சார ஆய்வாளரான “டேவிட் ஜோன்ஸ்” என்பவரின் அனுமானப்படி குரங்கு வழி வந்த மனிதகுலத்தின் மரபிலேயே இயற்கையாக பாம்பு,சிங்கம், புலி, கழுகு ஆகியவற்றைக் கண்டால் பயப்படும் குணம் உண்டு.
அந்த பயத்தின் பிரதிபலிப்பாக அம்மூன்று விலங்குகளும் இணைந்த மாய அசுர விலங்காக டிராகன் உருவெடுத்துள்ளது. சில அறிஞர்கள் பனியுக பிரளயத்தில் மறைந்துவிட்ட டைனொசர் விலங்கின் நினைவில் தான் கற்பனை டிராகன் உருவாகியிருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இந்திய கலாச்சாரங்களில் “விரித்ரா” என்ற விலங்கைக் குறிப்பதாக உள்ளது. ‘அஹி’ என்று அழைக்கப்பட்ட மூன்று தலை நாகமாக இந்திய வேத, புராணங்களில் காணலாம். ஆனால் பழங்கால கிரேக்க மாயா ஜால கதைகளில் ஹெர்குலிஸால் கொல்லப்பட்ட “லாண்டன்” என்ற நூறு தலை நாக சர்ப்ப உடல் கொண்ட டிராகன் பிரபலமானது.
இந்த மரப் பிசினின் சிவப்பு நிறம் டிராகனின் ரத்தத்தைப் போல இருப்பதால் டிராகன் மரம் என்ற பெயர்பெற்றது. அம்மரத்தின் கரடு முரடானதோற்றமும் டிராகனைப் போலவே சிறிதுஅச்சமூட்டக்கூடும். எது எப்படியாயினும் டிராகன் என்பது ஒரு கற்பனை அசுர விலங்கு என்பதும் அதன் உருவகமாகத்தான் இந்த ராட்சச மரம் டிராகன் மரம் என்று காரணப் பெயர் பெற்றது என்பதும் உண்மை. டிராகன் மரத்தின் ஊர் எது - நாடு எது?
டிராகன் மர இனத்தில் 6 உள் இனங்கள் வெவ்வேறு நாடுகளில் பரவி இருந்தாலும் மிகபிரபலமான டிராகன் மர உள் இனம் அரேபியகண்டத்தின் தென் கிழக்கு பகுதி நாடான யேமென் குடியரசின் தனித் தீவான சக்கோட்ரா என்ற பகுதியின் அடையாள மரமாக அதிக எண்ணிக்கையில் வளருகின்றது. அதன் தாவர இயல் பெயர் இதன் சகோதர உள் இனமான டிராகோ மரம், கனரி தீவுகளில் பிரபலம். நமது மருள் டிராகன் மரத்தின் தூரத்துச் சொந்தம் தான்.
சகோட்ரா தீவு ஆப்பிரிக்க அரேபிய கண்டங்கள் மற்றும் அரேபிய வளைகுடா ஆகியவற்றின் முச்சந்தியில் இந்து மா கடலின் வட முனையில், நான்கு தீவுகள் கொண்ட கூட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இந்த சகோட்ரா தீவின் பெயருக்கு அடிப்படைச் சொல் “சுஹாதார” அதாவது பரிசுத்தமான என்ற சமஸ்கிருத வார்த்தை என்பது ஒரு யூகம்.
ஆதிகால “கொண்டுவானா” நிலப்பரப்பின் ஒரு பகுதி தான் என்றாலும் பல்லாயிரக் கணக்கானகணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டப் பிளவினால் தனித்தீவானதால் தனித்துவமான புவி அமைப்பு, வித்தியாசமான கால நிலை, அதற்கேற்ற விசித்திரமான உயிரினக் கூட்டங்கள் என்ற பண்புகளைப் பெற்றது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தனித்துவமான உள்ளூர் உயிரினங்களைக் கொண்ட நிலப் பரப்புகளில் இந்த தீவுமுக்கியமானது.
அப்படிப்பட்ட தீவின் வித்தியாசமான மரம் தான் இந்த டிராகன்மரம். வெப்பம், வறட்சி, கடும் புயல் இடையில் நான்கு மாதங்களுக்கு பனி போல் மழை என்ற காலநிலையும் பாறை, சுண்ணாம்பு, மண் என்ற நிலப் பாங்கும் கொண்ட சூழ் நிலைக்கேற்ப பண்பு அமைந்த இனம் இந்த தலை கீழ் குடைமரம்.
மரமா செடியா?
இந்த மரம், தென்னை பனை போல முளைக்கும் போது ஒரு விதையிலை மட்டுமே உருவாகும் இனம். உண்மையில் இது மரம்என்ற இலக்கணத்தில் பொருந்தாதச் செடிஇனம் தான்! தென்னையும் பாலையும் அது போலவே செடிகள் தாம்!! ஆனால் பார்வைக்கு மரங்களாக அவை தெரிகின்றன. மரம் என்றால் தொடர்ந்து கிளைக்கவேண்டும். நேர் வளர்ச்சி குறுக்கு வளர்ச்சி என்ற இரண்டு வித வளர்ச்சி இருக்கவேண்டும். வெளியே மென் கட்டை உள்ளே வன்கட்டை என்ற வேறுபாடு இருக்கும்.
ஒருவித்திலைத் தாவரங்களில் இந்த பண்புகள் இல்லை.ஆனால் இந்த டிராகன் ஒருவித்திலை தாவரமாக கூட ஒரு குறிப்பிட்ட உயர நேர் வளர்ச்சிக்குப் பிறகு குடைக் கம்பிகள் போன்ற வட்டக் கிளைப்புகளும் வித்தியாசமான குறுக்கு வளர்ச்சி மூலம் கட்டைத் தண்டுகளும் மரமாக பெற்று விசித்திர விகார உருவெடுக்கிறது. ஒரு வித்திலை தாவரங்களில் அதிக இரட்டைக் கிளைப்பு கொண்ட மரமாக இதனைக் கருதலாம்.
தட்ப வெப்பத்திற்கேற்ற தந்திரம்
நிலமோ பாறை, காற்றோ வெப்பம் என்ற சூழலில் இதில் ஒரே வசதி தொடர்ந்து நான்குமாதங்களுக்கு பனி போல் பூமழை. இத்தகைய வாழிடத்தை எவ்வளவு உபயோகமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு தன் உருவத்தையும் அமைப்பையும்செதுக்கிக் கொள்ளும் சுய சிற்பியாக டிராகன்மரம் விளங்குகிறது! அந்த இயற்கைச் சிற்பத்தின் உன்னதத்தைக் காணலாம் வாருங்கள். நான்கு மாத பூமழையில் கிடைக்கும் துளித்துளி திவளைகளை பாறை இடுக்குகளில் செலுத்துவதற்கு வசதியாக இரட்டைஇரட்டையாக கிளைத்த கிளைகள் தலை கீழ்குடை போல் விரிந்து சுமார் 60 செ. மீ. நீளமும் 3 செ.மீ அகலமும் உடைய நீள் ஓலை
இலைகளை கோண கால்வாய்களாக்கி மழை நீரை பூமியில் வழியவிட்டு நீர் சேமிக்கும் அற்புதம் ஒரு புறம். அதே குடை கீழே நிழல் கொடுத்து சேமித்த நீர் ஆவியாகாமல் காத்து, விழுந்த தன் விதையும் தோழமை செடிகளும் தழைக்கச் செய்யும் சமூக உணர்வு ஒருபுறமாக அந்த டிராகன் மரம் என்ற சிற்பிமிளிர்கிறான்.
3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை இலைகள் அனைத்தும் உதிர்ந்து புது இலைகள் பசுமை கூட்டிவிடும். பூக்கும்காலம் இடத்துக்கு இடம் வேறுபட்டாலும் பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் வெண்ணிறமான, மணம் வீசும் மலர்கள் கொத்துக்காளாக கிளை நுனிகளில் காணப்படும். மலர்ந்த ஐந்து மாதங்களில் பசுமை காய் உருவாகி கருமை நிறமாகி பின்பு சிவப்புக் கனியாகும். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவாகி தன் உள்ளே இருக்கின்ற விதைகளை வித்தாக பரப்பிடச் செய்யும்.
கற்பனைப் பயன்களும் உண்மைப் பயன்களும்.
டிராகன் மரப்பட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் குங்குமச் சிவப்பான பிசின் டிராகனின் ரத்தம் என்றே அழைக்கப்படுகிறது. ஆதி காலத்தில் அது விலை மதிப்பற்ற மந்திரப் பொருளாகவும் மருத்துவப் பொடியாகவும் விளங்கிற்று. ஆப்பிரிக்க பழங்குடியினரின் மாயாஜால (“வூடு” ), ரசவாத மருத்துவத்தில் அதற்கு தனி இடம் இருந்திருக்கிறது. அந்த சிவப்புப் பொடியை மந்திர சாம்பிராணியாக்கி புகையை விட்டு வீடுகளிலிருந்து தீய சக்தியை விரட்டும் தந்திரங்கள் அக்காலத்தில் நிகழ்ந்துள்ளன.
அதேபோல சிவப்பு மையோடு இந்தப்பொடியைக் கலக்கி மந்திரித்து தாயத்துகள்செய்து கட்டிக்கொள்ளும் பழக்கமும்இருந்திருக்கிறது. ஆனால் இதே பிசின் 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தாலியிலும் மற்ற நாடுகளிலும் வயலினை மெருகேற்றும் வண்ண வார்னிஸாக பயன்பட்டிருக்கிறது. சாகோட்ரா தீவில் உள்ள ரூமி என்ற நகர மக்கள் சிலர் பல நோய்களுக்கான முக்கிய மருந்தாக கருதி வந்துள்ளார்கள்.
காயத்திற்கு இடு மருந்தாக ரத்தம் உறைய வைக்க காய்ச்சலைக் குறைக்க, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த என்று அதன் மருத்துவக் குணப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆனால் தற்காலத்தில் அதன் பயன்பாடு குறைந்துவிட்டது என்று கூறலாம். டிராகோ மரம், குரோட்டன் மரம், ஒரு வகை பிரம்பு மரம் ஆகியவற்றின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் பிசின்களும் டிராகனின் ரத்தம் என்றே அழைக்கப்படுகின்றன.
டிராகன் மர இலைகளின் தடிப்பும், வன் தன்மையும் சுவையற்ற பண்பும் ஆடுமாடுகளுக்கு விருப்ப தீனியாக இல்லாவிட்டாலும் வறட்சி காலங்களில் வேறு வழியில்லாமல் டிராகன் இலைகள் தீவனம் ஆகின்றன.
பரப்பும் இருப்பும் வாழிடம்
சகோட்ரா தீவின் முக்கிய மரமாக அது இன்றும் பரவி இருந்தாலும் கால் நடைகளின் வறட்சி கால தீவனமாக பயன்பாடு, தட்பவெப்ப நிலையில் மாற்றம், சுற்றலா விளைவு ஆகியவற்றால் அதன் வாழிடத்துக்கு நெருக்கடி ஆரம்பித்துள்ளது. அத்தீவின் தாவர வனத்தைக் காப்பாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன. சகோட்ரா தீவு உலக கலாச்சார சின்னங்களில் ஒன்றாகவும், உலகஉயிரான வன பகுதிகளில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்