இரு வார ஓய்வின் எதிர்மறை விளைவுகள்
வெறும் இரண்டு வாரங்களுக்கு அதிக உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது, நீரிழிவு நோய் அபாயம் (Pre-Diabetes) உள்ள முதியவர்களின் ஆரோக்கியத்தில் பெரும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும், அதிலிருந்து மீள்வது கடினம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ப்ரி-டயபடிஸ் எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் சும்மா இரு வாரங்களுக்கு தம் செயல்பாடுகளை குறைத்துக்கொண்டால் அது நோயின் தாக்கத்தை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல் அவர்களில் பலருக்கும் ப்ரி-டயபடிஸ் முழு அளவிலான டயபடிஸ் ஆக மாறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இயல்பான செயல்பாட்டுக்கு இரண்டு வாரங்கள் திரும்பிய பின்னும் சில பங்கேற்பாளர்கள் முழுமையாக குணமடையவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ப்ரி-டயபடிஸ் இருப்பவர்களுக்கு கொரொனா அல்லது விபத்து மாதிரி எதாவது பிரச்சனைகள் நேர்ந்தால் அவர்கள் சுமாராக இரு வாரங்களுக்கு படுக்கையில் முழு ஓய்வில் இருக்க நேரிடும். அப்போது அவர்கள் நடக்கும் அன்றாட நடையின் எண்ணிக்கை 1000 அடிகளுக்கும் (1000 steps) கீழ் குறையும். அவர்களின் ப்ரிடயபடிஸ் அளவுகளில் இதனால் என்ன பாதிப்பு வரும் என இந்த ஆய்வு ஆராய்ந்தது
ஆய்வில் பங்கேற்பாளர்கள் தங்கள் தினசரி நடைகளை 1000 க்கும் குறைவாக குறைக்க வேண்டியது கேட்கப்பட்டது, இது நோய் போன்ற காரணங்களால் வீட்டை விட்டு வெளியேற முடியாததற்கு சமம். பங்கேற்பாளர்களின் நடைகள் மற்றும் செயல்பாடுகள் படிமானிகளையும் சிறப்பு செயல்பாடு கண்காணிப்புக் கருவிகளையும் பயன்படுத்தி அளவிடப்பட்டன, அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்கள் இரத்த சர்க்கரை அளவுகளை பரிசோதித்து இரத்த மாதிரிகளை இரண்டு வார காலத்திற்கு எடுத்தனர்.
படுக்கையில் இருந்த சில நாட்களிலேயே அனைவரின் தசை அளவுகளும், எலும்புகளின் வலுவும் குறையத்துவங்கியது. ரத்த சர்க்கரை அளவுகள் கூடி, இன்சுலின் எதிர்ப்பு எனும் நிலையும் பலருக்கும் தோன்றியது. இன்சுலின் எதிர்ப்பு என்பது உடலின் செல்கள் இன்சுலினை சரியாக கையாள முடியாத ஒரு நிலை. இன்சுலின் எதிர்ப்பு இருக்கும்போது, செல்கள் போதுமான குளுக்கோஸை கையாள முடியாது, இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது.இரு வாரங்களுக்குள் பலருக்கும் ப்ரி-டயபடிஸ் என்பது முழு அளவிலான டயபடிஸ் ஆக மாறியது.
இரு வாரங்கள் இப்படி படுக்கையில் ஓய்வு எடுத்தபின், அடுத்த இரு வாரங்க்ளுக்கு கடுமையாக உடல்பயிற்சிகள் செய்தும் பலருக்கும் பழைய உடல்நலம் திரும்பவில்லை.
இந்த ஆய்வின் முடிவுகள், உடல்நலக்குறைவு, மருத்துவமனை சேர்க்கை மற்றும் படுக்கை ஓய்வு போன்ற காரணங்களால் உடல் செயல்பாடு இல்லாத காலகட்டங்களை அனுபவிக்கும் முதியவர்கள், அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதைக் குறிக்கிறது.
ஒருவர் நீண்ட காலத்திற்கு நடக்க முடியாத நிலையில் இருந்தால், இரத்த சர்க்கரை கையாள்வதற்கான திறனை மீண்டும் பெற அவர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டும். பலரும் அப்படி செய்வதில்லை என ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
வெறும் இரு வார ஓய்வு முதியோரை ப்ரி-டயபடிக் எனும் நிலையில் இருந்து டயபடிக் எனும் அபாயகரமான நிலைக்கு மாற்றிவிடும், அதன்பின் இரு வாரங்கள் மிக கடினமாக உடல்பயிற்சி செய்தாலும், பழைய நிலை திரும்பாது என இந்த ஆய்வு விவரிக்கிறது. இந்த ஆய்வின் முடிவுகள் The Journals of Gerontology இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
0 கருத்துகள்