உடலில் கொழுப்பு சேர்வதன் பரிணாம ரீதியான அனுகூலங்கள்
உடலில் தொப்பை இருப்பதும், குண்டாவதும், அதீத கொழுப்பு சேர்வதும் பரிணாம ரீதியில் மிகவும் அனுகூலமானவை. குரங்காக இருந்தவர்களை மனிதனாக 2.5 மில்லியன் ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி அடையவைத்தவை நம் ஜீன்கள். நம் ஜீன்கள் கடந்த 2.5 மில்லியன் ஆண்டுகளாக பஞ்சத்துக்கு பழக்கபட்டவை. வேட்டை கிடைத்தால் விருந்து. வேட்டை கிடைக்கவில்லையெனில் பட்டினி. ஆக இப்படி 2.5 மில்லியன் ஆண்டுகளாக விருந்து- விரதம் மாடலில் இயங்கி பழக்கபட்ட நம் ஜீன்கள் கடந்த 10,000 ஆண்டுகளில் நிகழ்ந்த விவசாய காலகட்டத்துக்கு இன்னும் பழகவில்லை. காரணம் ஜீனில் 1% மாற்றம் நிகழ 1 லட்சம் ஆண்டுகள் ஆகும். ஆக இன்னும் 90,000 ஆண்டுகள் கழிந்தால் தானியம் நம் ஜீனுக்கு பரிச்சயம் ஆகும்.
நிலைமை இப்படி இருக்கையில் கடந்த 50 ஆண்டுகளில் நிகழ்ந்த விவசாய புரட்சியும், சாலையோர கடைகளில் மலிவு விலைக்கு பரோட்டாவும், பிரியாணியும் கிடைப்பதும் நம் மரபணுக்களுக்கு இன்னும் பரிச்சயம் ஆகவில்லை. மனித இன வரலாற்றில் எந்த தலைமுறையிலும் நம் தலைமுறையை போல் உணவு இத்தனை மலிவாக, இத்தனை எளிதில் கிடைத்தது இல்லை. 1960களின் மத்தியில் கூட இந்தியாவில் உணவு பஞ்சம் இருந்து லால்பகதூர் சாஸ்திரி நம்மை திங்கள் கிழமை உண்ணாவிரதம் இருக்க சொன்னார். ஆக 70களில் குட்டை கோதுமை கண்டுபிடிக்கபட்டு விவசாய புரட்சியே நடந்தது. உணவு பஞ்சம் என்றால் என்ன என்பதை அறியாத ஒரு தலைமுறை அதன்பின் பிறந்தது. ஆனால் அவர்கள் உடலில் இருந்தது விருந்து- விரதம் மாடலுக்கு மட்டுமே பழக்கபட்ட ஆதிவாசி மரபணுக்கள்.
பஞ்சகாலத்தில் உயிர்பிழைக்கும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? குண்டாக இருப்பவர்களுக்கு தான். அடிக்கடி வரும் உணவுதட்டுபாடு, பனிக்காலம் ஆகியவை ஒல்லியாக இருப்பவர்களை ஒழித்து கட்டிவிடும். உலகில் பல முறை இப்படி ஒல்லியானவர்கள் பஞ்சத்தால் அழிந்து உள்ளனர். ஆக 2.5 ஆண்டுகளாக தப்பி பிழைத்த அனைவரும் பரிணாமரீதியில் குண்டாகும் மரபணுக்களை உடையவர்களே.
நெருப்பு பற்ற வைக்க பெட்ரோல் இருந்தால் மட்டும் போதாது. தீகுச்சியும் அவசியம். குன்டாக்க மரபணு மட்டும் போதாது. குறைந்த விலையில் நிறைய கலோரிகளை கொண்ட உணவும் அவசியம்.
1970க்கு பின் பெட்ரோலும் நெருப்பும் ஒன்று சேர்ந்தன. பசுமைப்புரட்சியால் உலகெங்கும் பஞ்சம் நின்றது. அதன்பின் மேற்கத்தியமமாக்கல் குப்பை உணவுகளை உலகெங்கும் பரப்பியது. உலகில் குண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.நம் உடலை பொறுத்தவரை இது மிகப்பெரும் விருந்து காலகட்டம். அடுத்து வரும் பஞ்சத்துக்கு நம் மரபணுக்கள் நம் உடலை மிகப்பெரும் அளவில் தயார் செய்து கொண்டுள்ளன. அடுத்து பஞ்சம் வராது என்பதும் உங்கள் வீட்டில் நூறுகிலோ அரிசி இருப்பதும் உங்கள் மரபணுவுக்கு தெரியாது.
ஆக நீங்கள் குண்டாக இருப்பது 1970க்கு முன்பு வரை 2.5 மில்லியன் ஆண்டுகளாக உங்களை உயிர்பிழைக்க வைக்கும் மிகப்பெரும் இன்சூரன்சு. 1970க்கு பின்னர் குண்டாக இருப்பது தேவையற்ற விஷயம். இப்போது பேஷன் டிரென்டால் குண்டர்கள் வெறுத்து ஒதுக்கபடுகின்றனர். ஆனால் பண்டைய காலகட்டங்களில், ஏன் இன்னும் பல சமூகங்களில் குண்டாக இருப்பது தான் அழகு, விரும்பதக்கது.
குண்டாக இருப்பது பரிணாமரீதியில் அனுகூலமானது என்பதை ஒரு நிகழ்வு சுட்டி காட்டுகிறது. ஏபி எனும் 27 வயது இளைஞர் 207 கிலோ எடையில் குண்டாக இருந்தார். உடலை குறைக்க அவர் செய்தது மிக எளிமையான விஷயம். தொடர் உண்ணாவிரதம் இருந்தார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்த உண்ணாவிரதம் 382 நாட்கள் நீடித்தது. அதாவது ஒரு வருடம் ஒரு மாதம் வெறும் நீர் மட்டும் அருந்தி உண்னாவிரதம் இருந்து 127 கிலோ எடையை இழந்து சுமார் 80 கிலோ உடல் எடைக்கு மாறினார். 382 நாள் விரதம் என்றதும் மருத்துவமனையில் பெட் ரெஸ்டில் இருந்தார் என நினைக்கவேண்டாம். அன்றாடம் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்தார். ஆபிஸ் போனார். உணவு மட்டும் உண்னவில்லை.
382 நாள் சாப்பிடாமல் இருந்தால் ஒல்லியான மனிதர்கள் யாரும் உயிர்பிழைக்க மாட்டார்கள். ஆக பஞ்சமும், பட்டினியும் நிலவிய காலகட்டத்தில் தப்பி பிழைத்த அனைவரும் குண்டாக்கும் ஜீன்களை உடையவர்கள். நமக்கு பிடிக்கிறதோ, பிடிக்கலையோ நாம் அனைவரும் குண்டாகும் வரம் (அது வரம் தான்) பெற்றவர்கள். விருந்து, விரதம் மாடலில் இது விருந்து காலகட்டம். விரதத்துக்கு மாறினால் ஏறின அதே விதத்தில் கொழுப்பு கரையும். ஆக "காலை உணவை ஸ்கிப் செய்யாதே" "தினம் ஆறு சின்ன சின்ன மீல்களை சாப்பிடு" என்பது மாதிரி கட்டுரைகள் எவ்வளவு அபத்தமானவை என்பது விளங்கும். பனியுகத்தில் சுற்றுவட்டாரம் நூறு மைலில் எதுவும் இல்லாத காலகட்டத்தில் காலை உணவை ஆதிமனிதன் ஸ்கிப் செய்துதான் ஆகவேண்டும்.
பட்டினி நம் மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. அல்சைமர், டிமென்ஷியா முதலிய வியாதிகள் வாராமல் தடுக்கிறது. பட்டினி கிடைக்கையில் மூளையில் புதிதாக செல்கள் முளைக்கின்றன. காரணம் எளிது: பட்டினி. கண்ணுக்கு எட்டின தூரம் வரை பனி. எந்த உணவும் கண்ணுக்கு தெரியவில்லை. எதையாவது பொறி வைத்து பிடிக்கலாமா, ஐஸை உடைத்து கீழே இருக்கும் நீரில் ஐஸ் பிஷிங் செய்யலாமா, நூறு மைல் நடக்கலாமா என மூளை யோசித்தே ஆகவேண்டும். ஆக மூளை செல்கள் வளர்கின்றன. நினைவாற்றல் அதிகரிக்கிறது. டிமென்ஷியா முதலிய வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்.
பரிணாம ரீதியாக, பஞ்சகாலத்தில் உயிர்வாழ்வதற்கு கொழுப்பு சேர்வது அவசியம். ஆனால் நவீன உலகில் மலிவு விலை உணவுஉம், குறைந்த உடல் உழைப்பும் இணைந்ததன் காரணமாக, அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து, சுகாதார பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
குறிப்பு
#மற்றபடி கட்டுரையின் நோக்கம் உடல் பருமனை ஆதரிப்பதல்ல. மாறாக, அதன் பின்னணியில் உள்ள பரிணாம காரணிகளை விளக்குவது மட்டுமே. குண்டாவது பரிணாமநீதியில் அணுகூலமானது என்பதாலேயே நம் மரபணுக்கள் நம்மை குண்டாக வைத்திருக்க முயல்கின்றன. ஆனால் அவை செய்வது மிக பழமையான, தற்காலத்தில் அவசியமற்ற ஒரு போராட்டம். இதை அவை உணர பல்லாயிரம், அல்லது பல லட்சம் ஆண்டுகள் ஆகலாம். அதுவரை நாம் பட்டினி (உண்ணாவிரதம்) மற்றும் உழைப்பு (உடல்பயிற்சி) மூலம் தான் இதை சரிசெய்ய முடியும்
https://medicinalseedkit.com/kit/#aff=Ramchan
0 கருத்துகள்