ஜாதகத்த்தில் உள்ள முதல் வீடு (கட்டம்) லக்கின பாவம் என கூறுவர். இது ஜாதகரைப் பற்றி விவரங்களைக் கொடுப்பதாக இருக்கும். ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்களும் ஒவ்வொரு பாவம் எனப்படும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணத்தை கொண்டுள்ளது. இங்கு ஒரு கிரகம் அமரும் போது அதற்கான பலன்களை தர வல்லது.
வாழ்க்கை என்ற ஜாதக வரைபடத்தின் முக்கிய புள்ளி லக்னமாகும். ஒருவருடைய தனித்தன்மை என்பதை லக்ன பாவத்தை வைத்தே அறிய முடியும். ஒரு ஜாதகரின் தனித்தன்மை என்பதை தாண்டி உடல் அமைப்பில் லக்னபாவம் என்பது தலைப்பகுதியைக் குறிக்கும். தலை என்பதில் மேல் பகுதியான நெற்றி, மூளை, கேசம் மற்றும் அவற்றின் அமைப்பு போன்றவற்றை லக்னபாவம் குறிக்கும்.
உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குவதைப் போல், லக்னபாவம் என்ற ஜாதகத்தில் குறிக்கப்படும் முதல் கட்டம், 12 பாவங்களின் காரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இயங்கும். குறிப்பாக சொல்ல வேண்டு என்றால் லக்னபாவம் எல்லா கட்டங்களின் காரகங்களை தன்னுள் வைத்துள்ளது.
லக்னபாவத்திலிருந்து மற்ற பாவங்களுக்கு காரகங்கள் பிரித்து தரப்படுகின்றன. உடலில் உயிர் பொருந்தி இருக்கும் இடம் மூளை, எனவே லக்னம் என்பது மூலம் (SOURCE) அதாவது உயிரையும் குறிக்கும் காரகமாகும்.
ஒரு விடயத்தின் ஆரம்பம், முடிவு இருப்பதைப் போல, லக்னம் என்பது தொடக்கம் என்பதைக் குறிக்கும்.. ஜாதகரின் உடலின் பொதுவான தோற்றத்தை, உருவ அமைப்பை லக்னபாவமே நிர்ணயிக்கும். ஜாதகரின் தனித்தன்மையையும், தனி திறமைகளையும் லக்னபாவமே நிர்ணயிப்பதால், மற்றவரிடமிருந்து ஜாதகரை முழுவதுமாக வேறுபடுத்தி காட்டுவது லக்னமே ஆகும்.
எனவே லக்னத்தின் வலிமையைப் பொருத்து தலைவர்கள், தலைமை பண்பிற்கு சொந்தக்காரர்கள், திறமைசாலிகள், கௌரவமானவர்கள், சுயமான அறிவு உள்ளவர்கள் அல்லது வெகு சாதரணமான மனிதர்கள் போன்றவற்றை லக்ன பாவத்தைக் கொண்டே அறியப்படுகிறார்கள்.
லக்னபாவத்தின் ஆதிபத்யங்கள்
எதையும் அனுபவிக்கும் யோகம், அதாவது எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் அனுபவிக்கும் யோகம் இல்லை என்றால் அவற்றால் எந்த பயனுமில்லை.
ஜாதகரின் பொதுவான எண்ண ஓட்டங்கள், சுய முயற்சிகள், செயல்திறன், துறையில் சாதனை படைக்கும் ஆற்றல், ஆரோக்கயம், பெருந்தன்மை, தனிமனித ஒழுக்கம், புகழ், நிர்வாக திறன், சாதனை படைக்கும் தன்மை, வெற்றி அல்லது தோல்வி, ஆண்மை மற்றும் பெண்மை தன்மைகள், உடலின் நோய் எதிர்ப்பு திறன், தான் என்ற எண்ணம், பணத்தை விட கௌரவத்திற்கு முக்கயத்துவம் கொடுத்தல், அல்லது பணத்தை இழந்து கௌரவத்தை பெறுதல் போன்றவைகள் லக்னபாவத்தின் காரகங்கள் ஆகும்.
லக்ன பாவம் மிகவும் பாதிக்கப்பட்டு மற்ற 11 பாவங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், அந்த 11 பாவங்களின் காரகங்களை ஜாதகரால் அனுபவிக்க முடியாது.
அன்புடன்
சந்திர ஆதித்யன்.
0 கருத்துகள்